தேராவில் குளத்து மேலதிக நீரை வெளியேற்ற புதிய திட்டம் - தமிழ்வின்
Source: Tamilwin
முல்லைத்தீவு - தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் திட்டத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வழமைக்கு மாறக கிடைக்கப்பெற்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளம் நிரம்பி காணப்படுவதோடு மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் குளத்தினை அண்மித்த பகுதியில் உள்ள மக்களின் வீடுகள் கடந்த டிசம்பர் மாதம் 18 ம் திகதி முதல் சுமார் இரண்டு மாதங்களாக குளத்து நீரில் நிரம்பி காணப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதியில் வசித்த குடும்பங்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ளனர் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையில் இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்கள் பல்வேறு தரப்பினருடன் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் முதற் கட்டமாக குறித்த தனியார் நிறுவனக் குழுவினர் வருகை தந்து பகுதியை பார்வையிட்டுள்ளனர்.
மேலும், குளத்தின் நீரினை வெளியேற்றுவதற்காக 18 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5.5 மில்லியன் வரையிலான நிதியில் பாலத்தினை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளவுள்ளதுடன் ஏனைய நடவடிக்கையினை தனியார் நிறுவனம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதற்காக குறித்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு வனவளத்திணைக்களத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது,மற்றும் கமக்கார அமைப்பினர்,கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மக்களின் பங்களிப்புடன் பாலம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை அதன் முதற்கட்டமாக இந்த குளத்து நீரினால் பதிக்கப்பட்ட 17 குடும்பங்களுக்கு இன்று நிவாரண பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.