கண்டி - பொல்கொல்ல நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியிலுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற தீர்மானம் | Virakesari.lk
Source: Virakesari.lk
கண்டி - பொல்கொல்ல நீர்த்தேக்கத்தை அண்டிய துட்டுகெமுனு மாவத்தையின் இருபுறமும் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, அனுமதியற்ற உரிய சட்டவிரோத கட்டிடங்கள் அனைத்தையும் அகற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதியின்றி சட்டவிரோத கட்டிடங்கள் நிமித்தம் கண்டி, பொல்கொல்ல அணைக்கும் மற்றும் பிரதேச குடியிருப்பாளர்களுக்கு அச்சுறுத்தலாகவும் மேலும் குறித்த பிரதேசத்தில் வீதிகளில் போக்குவரத்து தடையாக இருப்பதாகவும் பாதசாரிகள் தினமும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்படுவதாக மேற்படி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குணதிலக்க ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற குழு கூட்டத்தின் போது லெவெல்ல பாலத்தில் இருந்து பொல்கொல்ல அணை வரை செல்லும் துடுகெமுனு மாவத்தை மற்றும் உயன்வத்தை சந்திக்கு அருகாமையில் மிதவெல்ல வரையில் அனுமதியின்றி நிர்மாணப்பணிகள் நடைபெற்றுள்ளது, இதனால், பாதசாரிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறு ஏற்படுகிறதாக தலைவர் சுட்டிக்காட்டினார்.
அந்த நிலங்கள் இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமானது என்றாலும் மேற்படி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களை அகற்ற அதிகார சபைக்கு முடியாது என்பதால், அதன் அறிக்கையை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுடன் கள கண்காணிப்பு நடத்தி , ஒருங்கிணைப்புக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே, மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், கண்டி மாநகரஆணையாளர் இஷான் விஜேதிலக உள்ளிட்ட பல அதிகாரிகள் இக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.