Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் - தமிழ்வின்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் - தமிழ்வின்

Source: Tamilwin

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் அதிபர் மீது அடையாளம் தெரியாதோரால் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதிபர் பாடசாலையினை பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்று வரையான அவரது சாதனைகள் என்ற தலைப்பில் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய சுவரொட்டிகளை பல இடங்களில் அவர்கள் ஒட்டியுள்ளனர்.

சுவரொட்டியில் தங்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருந்த அவர்கள் "பாடசாலைச் சமூகம், நலன் விரும்பிகள்" என குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் அதிபர் மீதும் ஒட்டுசுட்டான் மற்றும் அயற் பாடசாலைகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் மீது முகநூலில் அவதூறுகள் பரப்பப்பட்டிருந்ததோடு பின்னர் அது சீர் செய்யப்பட்டிருந்தது.

ஒட்டுசுட்டான் மற்றும் அயற் கிராமங்களில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து தரிப்பிடங்களை பிரதானமாக இலக்கு வைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பல இடங்களில் பிரதான பாலங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

வாசிப்போரில் பலர் அவற்றை தாம் கிழித்து விட்டு வந்ததாக குறிப்பிடுகின்றனர். அவர்களிடம் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் என்ன சொல்கின்றீர்கள் என கேட்டதற்கு அதனைப்பற்றி பேச விரும்பவில்லை என குறிப்பிட்டனர்.

இத்தகைய அவர்களது அணுகலினால் சுவரொட்டியில் சொல்லப்பட்ட பல விடயங்களை அவர்களால் மறுத்துரைக்க முடியவில்லை என ஊகிக்க முடியும்.

குற்றச் சாட்டுக்கள் பொய்யானவை என்றால் அவர்கள் உறுதியாக அப்படியில்லை என மறுத்துரைத்திருக்க வேண்டும். எனினும் அப்படி ஒருவர் கூட குறிப்பிடவில்லை என்பது ஆச்சரியமான விடயமாக இருக்கின்றது.

கூழாமுறிப்பு பேருந்து தரிப்பிடம், ஒட்டுசுட்டான் பாடசாலைக்கு முன்னுள்ள பேருந்து தரிப்பிடம், சிவன் கோவிலுக்கு முன்னுள்ள பேருந்து தரிப்பிடம், மானுருவி சந்திக்கு அருகில் உள்ள பிரதான பாலம், கூழாமுறிப்பு குளத்திற்கு கீழ் உள்ள பிரதான பாலம் என பல இடங்களில் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டியில் இருந்த விடயங்களில் பிரதானமாக பாடசாலை அதிபர் நிதி மோசடிகளில் ஈடுபடுகின்றார். மாணவர்களின் கல்வியிலும் ஒழுக்கத்திலும் அக்கறையின்றி செயற்படுகிறார். அரசியலை பாடசாலை சமூகத்திடையே புகுத்துகின்றார் என நீண்டு செல்கின்றது.

சுவரொட்டியில் பின்வருமாறு விபரிக்கப்பட்டிருந்தன.

"கடந்த 01-01-2022 எமது பாடசாலையைப் பொறுப்பேற்ற அதிபரின் சாதனைகள் ஒரே பார்வையில்...

* பாடசாலை அபிவிருத்திச் சங்க பணம் 17 இலட்ச ரூபாவுக்கு என்ன நடந்தது.??

* பாடசாலையில் இருந்த சிறிய உழவு இயந்திரத்திற்கு என்ன ஆனது??

* பாடசாலைக்கு வந்த 90 கணணிகளின் உள் உதிரிப் பாகங்களுக்கு என்ன நடந்தது? யாருக்கு விற்றாய்?

* மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் பாடசாலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லையென ஏன் கூறுகின்றாய்??

* ஆசிரியர் விடுதிக்காக ஒதுக்கப்பட்ட 15 இலட்சத்தில் ஏன் திருத்த வேலை செய்ய விடாமல் தடுக்கிறாய்???

* 5 இலட்சம் ரூபாயில் செய்யவிருந்த நீர்த்தொகுதி வேலையை ஏன் தடுத்து நிறுத்தினாய்???அல்லது அனுமதி எடுக்காமல் வேலையைச் செய்யச்சொன்னாய்?

* 3 ஏக்கரில் நிரந்தர வருமானத்திற்காக மேற்கொள்ளவிருந்த தென்னை நடுகையை ஏன் தடுத்து வைத்திருக்கிறாய்??

* பல இலட்சம் ரூபாயில் பாடசாலையின் இருவாயில்களும் இரு பாதைகளையும் புதிதாக அமைக்கவிருந்ததை ஏன் தடுத்து நிறுத்தினாய்???

* 120 க்கு மேற்பட்ட மரங்கள் உரிய வகையில் நீர் வசதி கூடு அமைக்கப்பட்டிருந்தது.அவற்றை ஏன் அகற்றி அழித்தாய்??

* 12 வருடங்களாக நடைபெற்ற மாணவர்களின் பரீட்சைக்கான விசேட கருத்தரங்கு பணம் அனுப்பப்பட்டும் ஏன் தடுத்து நிறுத்தினாய்??

* மதிய போசன விருந்துக்காக வருகை தந்த உயர்தர வகுப்பு மாணவர்களை ஏன் அவமதித்து வீட்டுக்கு அனுப்பினாய்?

* பல இலட்சங்கள் செலவு செய்து திருத்தப்பட்ட மைதானத்தை ஏன் கால்நடை மேய்ச்சல் தரையாக மாற்றினாய்???

* பாடசாலைக்கு ஏன் நேரத்திற்கு வராமல் உன் நேரத்திற்கேற்றால் போல் வந்து போகிறாய்??

* பொன் விழா செயற்பாடெல்லாவற்றையும் ஏன் தடுத்து நாசமாக்கினாய்??

* உன் அரசியல் லாபத்தை ஏன் பாடசாலையில் தேடுகிறாய்??

கல்வி அதிகாரிகளே உடனே அகற்றுங்கள். எந்தப் பாடசாலைக்கும் அதிபராக அனுப்பாதீர்கள். பொருத்தமான ஓர் அதிபரை எங்கள் பாடசாலைக்கு நியமனம் செய்யுங்கள்!! அல்லது எல்லோரும் மாணவச் செல்வங்களின் வாழ்க்கையை அழித்த வரலாற்று துரோகம் இழைப்பவர்களாக மாறுவோம்.

பாடசாலைச் சமூகம் நலன் விரும்பிகள்."

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலம் மற்றும் அதன் தற்போதைய அதிபர் மீது சுமந்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிபர் தன் கருத்துக்களை வெளியிட்டு மறுத்துரைப்பாரா?

எனினும் அதிபருடன் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

வலய மாகாண கல்வி வலயங்களினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா?

தொடர் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து மறுத்து வரும் போக்கினை விட பொருத்தமான விளக்கங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிபரது செயற்பாடுகள் துணுக்காய் வலயக்கல்விப் பணிமணையினால் கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற கருத்தும் மக்களிடையே நிலவுவதனையும் அவர்களுடனான உரையாடல்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

சுவரொட்டி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொண்ட மக்களிடையேயான தேடலின் விளைவாக சில விடயங்களை அறிய முடிந்த போதும் இன்னும் பல விடயங்களை தெளிவுபடுத்த பாடசாலை சார்ந்த ஆசிரியர்களின் உதவி தேவையாக இருக்கின்றது.

எனும் அவர்கள் கருத்துரைக்க மறுத்துவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உயர்தர மாணவர்களுக்கான விருந்துபசார நிகழ்வில் மாணவர்களை திருப்பியனுப்பிய நிகழ்வு நடந்தது உண்மையே!

விருந்துபசார நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நிகழ்வுக்கு முதல் நாள் மாணவர் பலரது தலைமுடி தொடர்பில் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களால் அறுவுத்தல் வழங்கப்பட்டு தலைமுடியினை பாடசாலைக்கேற்ற முறையில் வெட்டி சீர் செய்து வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் தொடர்பில் கவனமெடுக்காது சீர் செய்யாத தலைமுடியமைப்போடு விருந்துபசாரத்திற்கு சென்றுள்ள வேளை அவர்களை தலைமுடியை பாடசாலைக்கேற்ற முறையில் வெட்டி வரவும் என திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால் குறிப்பிட்ட மாணவர்கள் திரும்பிச் சென்றதுடன் அவர்கள் மீண்டும் வந்து விருந்துபசார நிகழ்வில் கலந்துகொள்ள வில்லை.அவ்ர்களுக்காக அவர்களது நண்பர்களான இன்னும் சில மாணவர்களும் கலந்துகொள்ளாது திரும்பிச் சென்றதாக அறிய முடிந்தது.

தலைமுடி சீர் செய்யாது கலந்து கொள்ள விடவும் முடியாது.திருப்பியனுப்புவதும் கடினமானதாக இருந்தது.இருந்தும் முதல் நாளில் சொல்லிவிட்டும் மாணவர்கள் அதனை கவனமெடுக்காது வந்திருந்தனர் என ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய ஆசிரியர் ஒருவருடன் உரையாடிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பாடசாலைகள் மீது தொடர்ச்சியாக அவதூறுகள் ஏற்படுத்தப்படும் போது அவை சரியோ தவறோ விரைந்து செயற்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.அவதூறுகள் களையப்பட வேண்டும்.

நீண்டு தொடர்ந்து செல்ல விடுவதென்பது ஆரோக்கியமான நாளைய தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் நாம் அணைவரும் தோற்றுப்போவதாக அமைந்துவிடும் என சமூகவிடய ஆய்வாளர் வரதன் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.