கொழும்பு - ஜம்பட்டா வீதி துப்பாக்கிச்சூடு ; காயமடைந்தவர் 'புகுடு கண்ணா'வின் நெருங்கிய நண்பர் | Virakesari.lk
Source: Virakesari.lk
கொழும்பு - ஜம்பட்டா வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர் போதை பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றசெயல்களை புரிபவருமான 'புகுடு கண்ணா'வின் நெருங்கிய நண்பர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் ஹேனமுல்லயில் உள்ள 'மெத்ஸந்த செவன' வீடமைப்புத் திட்டத்தில் வசிக்கும் மொஹமட் ரில்வான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
'புகுடு கண்ணா' மற்றும் 'குடு செல்வி'யின் மகனான ரெமோஷன் என்பவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு காணரம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் ஜம்பட்டா வீதியிலுள்ள இறைச்சிக் கடைக்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மொஹமட் ரில்வான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.