முல்லைத்தீவு - பெரியகுளம் வீதியில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் - தமிழ்வின்
Source: Tamilwin
முல்லைத்தீவு - பெரியகுளம் வீதியில் தவசிகுளத்தின் வான் பாயும் பகுதியில் உள்ள பாதையில் வெள்ளத்தினால் பாரியளவிலான சிதைவுகள் ஏற்பட்டுள்ளன.
கொங்கிறீற்று இடப்பட்டுள்ள அந்த பாதையில் வெள்ளம் பாய்ந்த திசையில் கொங்கிறீற்றுக்கு அணைப்பாக இடப்பட்டிருந்த கட்டுமானம் உடைக்கப்பட்டு பள்ளம் தோன்றியுள்ளது.
கொங்கிறீற்று பாதையின் விளிம்பு வரை அணைப்பு அரிக்கப்பட்டு பாதை அச்சம் தரும் வகையில் சேதமடைந்துள்ளது. அணைப்பின் அரிப்பு இரண்டடி ஆழம் வரை சென்றுள்ளது.
தண்ணீரூற்று புளியங்குளம் வீதியில் தண்டுவான் பாடசாலையை அடுத்து கிழக்கு திசையில் ஆரம்பமாகும் பெரியகுளம் தண்டுவான் வீதியிலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
பாதையில் அச்சம் தரும் வண்ணம் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பிலான விடயத்தினை பொதுமக்களுக்கு சுட்டும் வகையில் எச்சரிக்கை பலகையினை காட்சிப்படுத்தல் வேண்டும் என சமூகத்தின் மீது அக்கறையுள்ள மனிதர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெள்ளத்தால் சேதமடைந்த பல வீதிகள் இருந்த போதும் அவை உடனடியாகவே மீள் செப்பனிடப்பட வேண்டிய தேவை இருந்தும் அவை பாராமுகமாகவே இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
விபத்துக்களை தவிர்த்துக் கொள்ள சேதம் தொடர்பில் ஏற்படும் ஆபத்தினை குறித்து எச்சரிக்கும் குறிகாட்டிகளையாவது உரிய தரப்பினர் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.