யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை ; சந்தேகநபர்களை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி | Virakesari.lk
Source: Virakesari.lk
யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை ; சந்தேகநபர்களை பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான ஐவரையும் 24 மணி நேரம் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த கணவன் மனைவியை பொன்னாலை பாலத்திற்கு அருகில் வைத்து இரு வாகனத்தில் வன்முறை கும்பல் கடத்தி சென்று கணவனை தாக்கி படுகாயம் ஏற்படுத்திய நிலையில் கணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , கிளிநொச்சி பகுதியில் தலைமறைவாக இருந்த அராலி பகுதியை சேர்ந்த நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
அதேவேளை வட்டுக்கோட்டை பகுதியில் வைத்தும் ஒரு சந்தேகநபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அராலி பகுதியில் ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பொலிஸார் மீட்டனர்.
காரினுள் இரத்த கறைகள் காணப்பபட்டதுடன், கொட்டான்கள், இரும்பு கம்பி என்பவையும் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களையும், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய பொலிஸார், பிரதான சந்தேக நபரை கைது செய்யவில்லை எனவும், கொலை சம்பவம் தொடர்பிலும், கொலை தொடர்பிலான சான்று ஆதாரங்களை பெற வேண்டிய தேவைகளும் உள்ளதனால், ஐந்து சந்தேக நபர்களையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய மன்றில் அனுமதி கோரினர்.
அதனை அடுத்து ஐந்து சந்தேகநபர்களையும் பொலிஸ் காவலில் வைத்து 24 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுக்க மன்று அனுமதி அளித்தது.