கதிரியக்க இயந்திர செயலிழப்பு: ஆபத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சிறுவர் நோயாளிகள் - தமிழ்வின்
Source: Tamilwin
கொழும்பு - மகரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையிலுள்ள நேரியல் முடுக்கியின் (linear accelerators) நீண்டகால செயலிழப்பு காரணமாக நூற்றுக்கணக்கான சிறுவர் நோயாளிகள் ஆபத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கதிரியக்கச்சிகிச்சைக்கு தேவையான நேரியல் முடுக்கி கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து செயலிழந்துள்ளது.
இதன்காரணமாக, நிலைமை மிகவும் தீவிரமான போதிலும், சுகாதார அமைச்சு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்காததால் பொதுமக்களால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அபேக்ஷா மருத்துவமனையில் தற்போது ஐந்து நேரியல் முடுக்கிகள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
இருப்பினும், செயலிழந்துள்ள இயந்திரமானது குழந்தை நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது.
மேலும், இந்த செயலிழப்பு காரணமாக 500இற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். பலர், குறிப்பாக குழந்தை நோயாளிகள் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கதிரியக்கச்சிகிச்சைகளுக்காக 700,000 முதல் 1.7 மில்லியன் ரூபாய் வரை அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டதையடுத்து பழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்ய அல்லது மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.