Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

முல்லைத்தீவில் பாவனைக்குதவாது போகும் நிலத்தடி நீர் - தமிழ்வின்

முல்லைத்தீவில் பாவனைக்குதவாது போகும் நிலத்தடி நீர் - தமிழ்வின்

Source: Tamilwin

முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள கிராமமொன்றின் ஒருபகுதி மக்களின் நிலத்தடி நீர் பாவனைக்கு உதவாதபடி மாறி வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் துறைசார் அதிகாரிகள் யாரேனும் கரிசனை காட்டாது இருந்து வருவது வருத்தமளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலத்தடி நீரின் இந்த மாற்றத்திற்கான காரணங்களை ஆராய்ந்தால் கிணறுகளை அமைக்கும் போதும் அமைத்த கிணறுகளை பராமரிப்பது தொடர்பிலும் மக்களுக்கு வழிகாட்டல்களை வழங்கினால் இந்த சிக்கலை தவிர்த்துக் கொள்ள முடியும் என சமூகவிட ஆய்வாளர் வரதன் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்துவதினால் மனித உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது. ஆயினும் அது இயற்கையானதாக மற்றும் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் வரும் உடுப்புக்குளம் கிராமத்தின் தாழ் நிலப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் நீண்ட கால அடிப்படையில் மாற்றத்திற்கு உள்ளாகி வருவதனை அப்பகுதி வாழ் முதியவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம் அறிய முடிகிறது.

1990ஆம் ஆண்டளவில் நல்ல நீராக இருந்து குடிநீராக பயன்படுத்தி வந்த சில கிணறுகளின் நீர் சவராக மாறி பயன்படுத்த முடியாது போய்விட்டது.மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு உப்புச் சுவை மிகுதியாக இருப்பதும் மாறிய நீரின் இயல்பாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குளிப்பதற்கோ அல்லது ஆடைகளை சலவை செய்யவோ இந்த நீரினை பயன்படுத்த முடியாது.சவர்க்காரம் போதியளவிற்கு நுரைக்காது என மற்றொருவர் இது தொடர்பில் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

2000ஆம் ஆண்டளவில் இன்னும் சில கிணறுகளின் நீர் பயன்படுத்த முடியாதளவுக்கு மாறிவிட்டன. இந்த மாற்றத்தினை சவராதல் என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டழைத்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டாகியுள்ள இன்றைய நாட்களில் இன்னும் பல கிணறுகள் சவராகிப் போவது இந்த நிலத்தடி நீர் தொடர்ச்சியாக மாற்றத்திற்குள்ளாகி வருவதனை உணர முடிகின்றது.

உடுப்புக்குளம் கிராமத்தில் உள்ள குளத்திற்கு கீழாக உள்ள கிணறுகளில் இந்த மாற்றத்தினை தெளிவாக அவதானிக்கலாம்.உடுப்புக்குளம் நரசிங்கர் ஆலயத்தினைச் சூழவுள்ள வீடுகளில் உள்ள கிணறுகளிலும் முன்னர் நல்ல நீராக இருந்து இப்போது சவராகி விட்டதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் வில்லுக் குளத்திற்கு அருகிலுள்ள பல வீடுகளில் உள்ள கிணறுகளிலும் நிலத்தடி நீர் சவராகி பயன்படுத்துவதற்கு பொருத்தமற்றதாக மாறிவருவதாக அப்பகுதி மக்களிடையே மேற்கொண்ட தேடலின் போது அறிய முடிகின்றது.

நீரோட்ட வழித்தடத்தில் இந்த மாற்றங்களை அவதானிக்கலாம் என குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்கும் வேலையினைச் செய்துவரும் ஒருவர் இது தொடர்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பிட்ட அளவு ஆழத்திற்கு நல்ல நீர் கிடைப்பதாகவும் அந்த மட்டத்திற்கு மேலும் கீழும் சவர் நீர் கிடைப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உடுப்புக்குளத்தில் முன்னர் நல்ல நீர் கிடைத்து வந்த கிணறு சவர் நீராக மாறிய பின்னர் அதன் அருகில் அமைக்கப்பட்ட குழாய்க் கிணற்றில் நல்ல நீரைப் பெற்றுக்கொள்ள முடிந்தது எப்படி என அறிய முற்பட்ட வேளையிலேயே குழாய்க்கிணறு அமைக்கும் ஒருவர் தன் அனுபவங்களைக் கருத்துக்களாக பகிர்ந்து கொள்ள முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நிலத்தொடரில் இருபது மீற்றர் இடைவெளியில் சவர் நீரும் நல்ல நீரும் என இரு வேறு இயல்புடைய நீர் இருப்பதும் கிடைக்கப்பெற்ற அவதானிப்பாகும்.

இந்த மண்ணில் எவ்வளவு அழுக்குகளைப் போட்டாலும் குப்பை கூழங்களைப் போட்டாலும் அவை உக்கலடைந்து மண்ணில் தேங்கி அதனை கறுப்பாக மாற்றிவிடாது.

உக்கலடைந்தவை மண்ணில் இருந்து கழுவப்பட்டு நிலத்தடிக்குச் சென்றுவிட, மேல் மண் எப்போதுமே சுத்தமாக இருப்பதனை அவதானிக்கலாம் என விவசாயத்தில் ஈடுபட்டு வரும் உடுப்புக்குளத்தினைச் சேர்ந்த விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு போகத்திற்கும் இயற்கை உரத்தினைப் பயன்படுத்த வேண்டும்.ஏனைய தரைகளில் ஆண்டுக்கொரு முறை அல்லது பல ஆண்டுகளுக்கொரு முறை பயன்படுத்தினால் இரசாயன உரங்களோடு விவசாயத்தினைச் செய்யலாம் என மேலும் குறிப்பிட்டார்.

ஆயினும் உடுப்புக்குளத்தின் மேட்டு நிலப்பகுதியில் இந்த நிலை மிகக் குறைவான அளவிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேட்டுநில மண்ணில் குறைந்த நீரைக் கொண்டு விவசாயம் செய்யலாம்.இயற்கைப் பசளைப் பிரயோகம் சாத்தியப்பாடானதாக இருக்கும்.

ஆயினும் உடுப்புக்குளத்தின் தாழ்நிலப் பகுதிகள் இதற்கு எதிர்மாறான இயல்பைக் கொண்டிருப்பதாக அந்த விவசாயி குறிப்பிட்டார்.

மண்ணின் இயல்பு , நிலத்தடி பாறையமைப்பு, மட்படைகளின் தன்மை, நீர் ஊற்றின் அளவு, மண்ணில் உள்ள கூழ் நிலை மக்கியின் அளவு அதன் ஆழம் என பல தரப்பட்ட தகவல்களை அவற்றின் பரம்பலினடிப்படையில் ஆய்வொன்றின் மூலம் பெற்றுக்கொள்ள ஆய்வுகளை முன்னெடுத்தால் நிலத்தடி நீர் பழுதடைதலுக்கான உண்மை காரணங்களை கண்டறிய முடியும்.

இனம் காணப்படும் காரணங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தால் நல்ல குடிநீரை அப்பகுதி மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என கவிஞர் நதுநசியுடன் இதுபற்றி கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதனை பிரதேச செயலகத்தின் மூலம் துறைசார் அதிகாரிகளைக் கொண்டு மேற்கொள்வதே இன்றைய நிலையில் சாத்தியப்பாடான ஒன்றாக இருக்கும்.பிரதேச செயலகம் இது தொடர்பில் அக்கறையற்று இருப்பதாக தான் கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நீண்ட காலமாக நீடித்து வரும் மக்கள் பிரச்சினையாக நல்ல குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் இந்தப் போராட்டம் நீடித்து வருகின்றது.அதிகாரிகள் கண்டுகொள்ளாததும் தொடர்ந்தவாறே இருப்பதும் குறிப்பிடத்தக்கது

சவர் நீரை நன்னீராக மாற்றும் பொறிமுறைகளைக் கூட இந்த மக்களுக்கு பரிந்துரைக்க முடியும்.ஆரோக்கியமற்ற குடிநீரை தொடர்ந்து பருகி வரும் மக்களின் அசௌகரியங்களை குடும்பநல உத்தியோகத்தர்கள் கூட இதுவரை கண்டுகொள்ளாது இருப்பது எப்படி என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருப்பது நோக்கத்தக்கது.

குழந்தைகளைக் கொண்டுள்ள குடும்பங்களின் வீடுகளுக்கு சென்று வரும் அவர்களுக்கு அந்த மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொடர்பில் கவனமெடுக்க முடியாதது பொறுப்புணர்ச்சியற்ற செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுகாதாரமற்ற உடல் நலந்திற்கு கேடு விளைவிக்கும் குடி நீரையே அப்பகுதி மக்கள் பருகி வருகின்றனர்.இதனை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களால் உரிய தரம்பினருக்கு சுட்டிக்காட்ட முடியும் என்பது யதார்த்தமானது.

கிராம சேவகராலும் கூட இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாது இருப்பதற்கு அக்கறையற்ற தன்மையே காரணமாகும் என்பதும் ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்படுகின்றது.

மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை தேடிச்சென்று அறிந்து கொண்டு நடவடிக்கைகளை எடுக்க ஆவணை செய்யும் நல்ல சமூக ஆரோக்கியமுள்ள அரச அலுவலகர்களையே பொதுமக்களிடையே கடமையாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்.அப்போது இத்தகைய சவால்களை சுட்டிக்காட்டும் நிலை தோன்றாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Could not load content